கடவுளின் தேசமான கேரளா, தமிழக ஆற்று மணலைத் திருடுவது ஏன்? மெத்தப் படித்தவர்கள் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதேன்? (2)

கடவுளின் தேசமான கேரளா, தமிழக ஆற்று மணலைத் திருடுவது ஏன்? மெத்தப் படித்தவர்கள் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவதேன்? (2)

ஜூலை 2021ல் மனு தாக்கல் செய்யப் பட்டது: சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க மணல் குவாரிகள், மணல் சேகரிப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் ஆராய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. நெல்லை அம்பை அருகே பொட்டலைச் சேர்ந்த வி.கிறிஸ்டி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு[2]: ”பொட்டல் கிராமத்தில் எம் சாண்ட் என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் ஆற்று மணல் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீஸார் உதவியுடன் இந்த சட்டவிரோதச் செயலில் பூமி எம் சாண்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் 14.3.2020-ல் புகார் அளித்தோம். இருப்பினும் பூமி எம் சாண்ட் நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். கிராம மக்கள் அளித்த புகார் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர், பால்ராஜ், சங்கரநாராயணன் லெட்சுமணன் ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களுக்கும் மணல் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமி எம் சாண்ட் நிறுவன உரிமையாளரைத் தப்பிக்க வைக்க இவர்களைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி உத்தரவு: இதேபோல் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கர், ”வண்டால ஓடை அணை அருகே கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு எம் சாண்ட் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஓடை அணைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி வருகிறார். தினமும் சுமார் 300 லாரி வரை மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அணை பலம் இழந்து வருகிறது. எனவே சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்தார். இவ்விரு மனுக்களையும் விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: ”மணல் சேகரிப்பு மையம் நடத்த மனுவேல் ஜார்ஜுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துள்ளார். இது தொடர்பாக மனுவேல் உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 243 அரசு ஹாலோ கிராம், அதிகாரிகள் கையெழுத்து இல்லாத போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றவாளிகளிடம் இருந்து சட்டவிரோத மணல் கடத்தலுக்காக அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய பதிவேடு கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து விசாரிக்கவில்லை. கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் சரியாக விசாரணை நடத்தியுள்ளார். இருப்பினும் இந்த வழக்கில் வருவாய், வேளாண், கனிமவளத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளது. இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது”.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக அபரிமிதமாக மணல் விலை உயர்ந்துள்ளது: தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்[3]. விருதுநகரில் வெம்பக்கோட்டை அணையிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு பகுதியில் அயல்ராஜாபட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிளில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது திருட்டு மணலுக்கு அரசு கெடுபிடி செய்வதால் அரசு குவாரிகளில் மணல் விற்பனை அதிகரித்து வருகிறது[4]. அரசு குவாரிகளில் இரண்டு யூனிட் மணல் ரூ.660 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் இரண்டு யூனிட் மணல் 14ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தூரங்களுக்கு தகுந்தாற் போல் டீசல் செலவு சேர்த்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு பலர் பணிகளை நிறுத்தியுள்ளனர். அரசு குவாரிகளில் மணல் வாங்குவதற்கு உள்ளூர்காரர்களுக்கும், வெளியூர்காரர்களுக்கும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மண் வளத்தை கேரள மாநிலம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறது: பல அரசு குவாரிகளில் உள்ளூர் லாரிகளுக்கு காலை 6 முதல் 11 மணி வரையிலும், மற்ற நேரங்களில் வெளியூர் லாரிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தேவை அதிகம் உள்ள நிலையில் வெளி மாநிலமான கேரளாவுக்கு அதிகம் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மண் வளத்தை கேரள மாநிலம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறது. வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும். கணபதிராமன், தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்க தலைவர்: உள்ளூரில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. அரசு குவாரிகளில் மணல் விதி முறைகளுக்கு மீறி எடுத்து வருகின்றனர். வைப்பாறு பகுதியில் மூன்று இடங்களில் அரசு குவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்: இதில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. கேரள மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். அரசு குவாரிகளை குறைத்து விதிகளுக்குட்பட்டு மணல் எடுப்பதை குழு நியமித்து கண்காணிக்க வேண்டும். பாறைகளை உடைத்து மணலாக்கி கட்டுமான பணிகள் செய்யும் புதிய தொழில் நுட்பத்தை அரசு கடைபிடிக்க வேண்டும். திருவேங்கட ராமானுஜம், சிவகாசி பாசன சங்க தலைவர்: வெம்பக்கோட்டை அரசு குவாரியில் உள்ளூர், வெளியூர் லாரிகளுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து மணல் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும்.

தமிழக எல்லைகள் மூலம் கேரளாவுக்கு மணல் தொடர்ச்சியாகக் கடத்தப் படுகிறது: கேரளாவுக்கு கன்னியாகுமரி மற்றும் கரூர் எல்லைகள் மூலம், தொடர்ச்சியாக ஆற்று மணல், கேரளாவுக்குக் கடத்தப் பட்டு வருகின்றது. இது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. இப்பொழுது, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பொது மக்களும், இந்த மணல் திருட்டைத் தடுத்து வருகிற்ர்கள். இருப்பினும், அரசு அதிகாரிகள். அவர்களது அரசியல் பலம், கோடிகளில் பணப்புழக்கம் என்றெல்லாம் வரும் போது, கண்ணை மூடிக் கொள்கின்றனர். நூற்றுக்கணக்கான லாரிகள் ஆற்று மணலுடன் எல்லைகளைக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றன. நியாயம், தர்மம், நீதி, சட்டம், ஒழ்க்கம் எல்லாம் இதில் யாரும் பார்ப்படில்லை. அதனால் தான், பிஷப்பே கைதாகியுள்ளார். ஆனால், கேரளாவில் அதுவும் சகஜமாகி விட்டது. அபயா கொலை, மூலக்கல் கற்பழிப்பு என்ற பல வழக்குகளில் பிஷப்புகள் சிக்கியுள்ளனர். நிதி மோசடி விவகாரங்களில், ஒரு கார்டினலே சிக்கியுள்ளார்.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தமிழ்.இந்து, சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க குவாரிகளில் சிசிடிவி கேமரா: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 21 Jul 2021 16:52 pm; Updated : 21 Jul 2021 16:52 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/695652-cctv-camera-in-quarries-to-prevent-illegal-sand-smuggling-high-court-order.html

[3] தினமலர், கேரளாவுக்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும், Added : ஜூன் 19, 2011  23:22

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=260534&Print=1

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.